முத்துவாப்பா

நீண்ட பகல்பொழுது.. படகு பேசிக்கொண்டிருக்கிறது.. காய்ந்த கரையுடன்!

Tuesday, March 23, 2010

தேடலின் குறுக்கே தெரிவது

அந்தப் பாலைமணல் வெளியில் பரதேசியாய் திரிந்தான் மஜ்னு. சுட்டெரிக்கும் சூரியனும் நள்ளிரவின் கடுங்குளிரும், புழுதிக்காற்றும் புதைமணலும் அவனுக்கு ஒரு பொருட்டாகவேயில்லை. தேடுகிறான் தேடுகிறான் தன் தெய்வக்காதலின் தேவதையை.. லைலாவை.

ஒரு பொழுதில் ஒரு சிறு நிழலைக் கடக்கையில் 'நில்லடா..'என்றொரு குரல் கேட்டு நின்றான் திரும்பினான். கண்டான் ஒரு கண்சிவந்த ஞாநியை.

'இறைவனைத் தேடி இதுகாறும் தவமிருந்தேன்..பாவிமகன்..பாதையில் குறுக்கிட்டு பாழாக்கினாய் என் தவத்தை..'

மருன்டான் அந்த மஜ்னு..மாலையிட்டன கண்கள் நீர்த்துளியில்..உதிர்த்தான் வார்த்தைகள் ஒன்றிரண்டாய்..

'இவ்வுலகின் என்னுயிரை எங்கெங்கும் தேடுகிறேன்..என் விழியில் உம் இருப்பை காணவில்லை இதுவரை நான்.. ஆனால் இறைவனையே தேடுகிறீர்.. உம் விழியில் எப்படி நான் உள்வந்தேன்..விந்தையிது...'

அழியப்போகும் இவ்வுலகில் ஒரு பெண்ணைத்தேடிய மஜ்னுவின் கண்கள் வேறெதையும் காணவில்லை. ஆனால் அழிவில்லா இறைவனைத் அறியத்தேடும் ஆன்மீகவாதியின் கண்களுக்கு இவ்வுலகின் இயக்கங்கள் சலனங்களே.

Labels: